Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

கட்சி நலனுக்காகப் பதவிகளைத் துறந்த பிரதிநிதிகளைக் கௌரவித்த தலைவர் ரவூப் ஹக்கீம்

Posted on November 16, 2026 by Admin | 63 Views

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயரிய நலனையும் கட்டுக்கோப்பையும் கருத்திற்கொண்டு கட்சியின் தீர்மானத்திற்கு அமைய உரிய காலத்தில் தமது பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளைத் தானாக முன்வந்து இராஜினாமா செய்த மக்கள் பிரதிநிதிகளைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று(15) சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் வழிகாட்டலுக்கும் உடன்பாடுகளுக்கும் மதிப்பளித்து தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்து முன்மாதிரியாகத் திகழ்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர பிதாவுமான எம்.எஸ்.நளீம் சாலி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித் ஆகியோருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். அத்துடன் கட்சியின் ஆணையை ஏற்று தமது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்த கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் இதன்போது தலைவர் ரவூப் ஹக்கீமினால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

அரசியலில் பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் சூழலில் கட்சியின் கட்டுக்கோப்பையும் தலைமைத்துவத்தின் தீர்மானத்தையும் முதன்மைப்படுத்தி எவ்வித தயக்கமுமின்றிப் பதவிகளைத் தியாகம் செய்தமை கட்சி வரலாற்றில் போற்றத்தக்க விடயமாகும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இத்தகைய அர்ப்பணிப்பும் விசுவாசமுமே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவமான பலம் எனவும் இவர்களது தியாகம் ஏனைய மக்கள் பிரதிநிதிகளுக்கும் கட்சியின் இளம் செயற்பாட்டாளர்களுக்கும் சிறந்ததொரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் நிகழ்வில் புகழாரம் சூட்டப்பட்டது.

இக்கௌரவிப்பு நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹபீப் ரிபான் ஆகியோர் முக்கிய அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கௌரவிக்கப்பட்டவர்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.