இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) அண்மையில் நடத்தப்பட்ட கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளர்களுக்கான (Scorers) தகுதிகாண் பரீட்சையில் நிந்தவூரைச் சேர்ந்த எம்.ஏ. அப்துர் ரஹ்மான் 86 புள்ளிகளைப் பெற்று சிறப்பான முறையில் சித்தியடைந்து இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ புள்ளிக்கணிப்பாளராகப் பணியாற்றுவதற்கான முழுமையான தகுதியினை அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
நிந்தவூர் சதாம் விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட வீரரான இவர் ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் (ACUSL) அங்கீகாரம் பெற்ற நடுவராகவும் (Umpire) செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுத்துறை மாத்திரமன்றி அரச சேவையிலும் திறம்படச் செயற்பட்டு வரும் அப்துர் ரஹ்மான் பொத்துவில் பிரதேச செயலகத்தின் நலன்புரி நன்மைகள் சபையின் தகவல் பிரிவில் சிரேஷ்ட உத்தியோகத்தராகக் கடமையாற்றி வருகின்றார்.
கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத்துறைகளிலும், பல்வேறு சமூகப் பணிகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டு வரும் அப்துர் ரஹ்மானின் இந்த புதிய மைல்கல்லுக்கு விளையாட்டுத்துறை ஆர்வலர்கள், சக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.