Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் ஹாபிழ்கள் மற்றும் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு விழா | | இலங்கை – ஐக்கிய அரபு அமீரக பாராளுமன்ற நட்புறவுச் சங்க உதவிச் செயலாளராக உதுமாலெப்பை எம்.பி. தெரிவு | | தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்புரை |
Nov 29, 2026

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நற்பிட்டிமுனையில் சாதாரண தர மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு

Posted on November 21, 2026 by Admin | 97 Views

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் ரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி அடைவுமட்டத்தை உயர்த்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கல்விக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வு இன்று சனிக்கிழமை (21) நற்பிட்டிமுனை கமு/லாபிர் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

நற்பிட்டிமுனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்தரங்கில் நற்பிட்டிமுனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த பெருமளவான சாதாரண தர மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதுடன் மாணவர்களைப் பரீட்சைக்குத் திறம்படத் தயார்படுத்துவதே இந்நிகழ்வின் அடிப்படை நோக்கமாக அமைந்திருந்தது.

பாடத்திட்டம் சார்ந்த வழிகாட்டல்களுக்கு அப்பால் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதும், சவால்களையும் தோல்விகளையும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றிக்கொள்ளும் ஆரோக்கியமான மனப்பக்குவத்தை உருவாக்குவதும் இக்கருத்தரங்கின் பிரதான இலக்குகளாக முன்னிலைப்படுத்தப்பட்டன. பரீட்சை குறித்த அச்சத்தைக் களைந்து திட்டமிட்ட நேர முகாமைத்துவம் மற்றும் முறையான கற்றல் நுட்பங்களின் ஊடாகத் தமது கல்வி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான ஆக்கபூர்வமான ஊக்குவிப்புகளும் இங்கு வழங்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய மாணவர்களே நாளைய சமூகத்தின் தலைவர்கள். சரியான தருணத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டலும் நம்பிக்கையூட்டலும் அவர்களின் வாழ்க்கையில் மட்டுமன்றி முழுச் சமூகத்திலும் மிகப்பெரிய நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும்“ என வலியுறுத்தினர். கல்வியின் ஊடாக மாணவர்கள் தமது உயரிய கனவுகளை நனவாக்கிக்கொள்ள இவ்வாறான முன்னெடுப்புகள் வலுவான அடித்தளமாக அமையும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

சமூகப் பொறுப்புணர்வுடன் இளைஞர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்தரங்கிற்குப் பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அதிதிகள், வளவாளர்கள் மற்றும் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் நற்பிட்டிமுனை இளைஞர் காங்கிரஸின் ஏற்பாட்டுக் குழுவினர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.